இயேசுவின் இதய அன்பே குருத்துவம்.
குருக்களின் ஆண்டு 2009.06.19 - 2010.06.11

குருக்களின் ஆண்டுக்கான செபம்.
என்றும் குருவான எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையே, எம் இறைவா, குருக்களின் ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் நாங்கள் எங்கள் குருக்களுக்காக மன்றாடுகின்றோம். எம்மிடையே இருந்து நீர் தேர்ந்தெடுத்த குருக்கள், உம் இதயத்திற்கு நெருக்கமானவர்கள். உமக்கும்- எமக்கும் இடையே இணைப்பாளராய் இருந்து பரிந்து பேசி, எமக்காக திருப்பலியையும், அருட்சாதனங்களையும் நிறைவேற்றி, திருப்பணி ஆற்றி, நற்செய்தியை எடுத்துரைத்து, அருள்வாழ்வில் திடப்படுத்தி, மீட்புப் பாதை வழியில் வழிநடாத்தி தூய வாழ்விற்கு அழைத்துச் செல்பவர்கள் எம் குருக்கள்.உம்முடைய திருவுடலை ஏந்தும் அவர்களுடைய கைகளையும், திரு இரத்தத்தை அருந்தும் அவர்களுடைய உதடுகளையும் கறைபடாமல் காத்தருளும். மறு கிறிஸ்துவாக செயல்பட உமது தூயஆவியின் அருளைத் தொடர்ந்து அவர்கள்கள் மேல் பொழிந்தருளும். இறையரசுப் பணியை மேற்கொள்ளும்போது ஏற்படும் இன்னல் இடையூறுகள், எதிர்ப்புகளுக்கிடையில் துணிவுடனும், மாறாப்பற்றுடனும் தொடர்ந்து பணியாற்றும் பலத்தை அளித்தருளும். பணித்தளத்தின் எந்தச் சூழ்நிலையிலும் தடுமாறாமல் செப, தப, நற்செய்தி, அருட்சாதன வாழ்வில் நிலைத்திருக்கச் செய்தருளும். உமக்காகவும், எமக்காகவும் அயராது உழைக்க அவர்களது உடல், உள, ஆன்மீக நலன்களைக் காத்தருளும். இறுதிவரை உமக்கும், எமக்கும் உகந்தவர்களாக அவர்கள் வாழ்ந்திட அருள்புரியும். அவர்கள் உலகின் நடுவே வாழ்வதாலும், உலக இன்பங்கள் அவர்களைச் சோதிப்பதாலும் அவர்களை உமது இதயத்தில் வைத்துக் காப்பாற்றும்.இறையாட்சிப் பணியில் நாங்கள் அவர்களுடன் ஒத்துழைக்கவும், அவர்களுடன் மாண்புடன் நடந்து கொள்ளவும் அருள்தாரும். குருக்களின் பாதுகாவலராகிய புனித ஐான் மரிய வியானியைப்போல் அர்ப்பணத்த வாழ்ந்து, நித்திய குருவான இயேசுவின் இதயத்துக்கு உகந்தவர்களாய் அவர்கள் வாழச்செய்யும். எங்கள் குடும்பங்களில் இருந்து உமக்குத் தேவையானவர்களை உம் பணிக்கெனத் தேர்ந்து கொள்ளும்.இவற்றையெல்லாம் அருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடு கின்றோம். ஆமென்.
குருக்களுக்கான பாடல்.
ஆண்டவரே பரிசுத்த குருக்களை நீர் தாரும் அருள் வாழ்வில் எம் குருக்கள் வாழ அருள்கூரும். இறைமகனின் திருப்பணியைத் தொடர்ந்தெங்கும் ஆற்ற இருள் சூழ்ந்த உலகினிலே அருள் விளக்கை ஏற்ற வாழ்வளிக்கும் உண்மைகளை உலகிற்கு வழங்க வற்றாத பேரன்பின் ஊற்றாகத் திகழ. நெஞ்சிற்கு நிறைவளிக்கும் இறைவனையே புகழ நிலவுலகில் அமைதியின் தூதுவராய்த் திகழ நஞ்சான கொள்கைகளை அஞ்சாமல் தாக்க நலம் சேர்க்கும் நெறிகள்தனை பலமாகக் காக்க. புனிதத்தின் நறுமணத்தை புவியெங்கும் சேர்க்க புண்ணான நெஞ்சத்தில் புத்துயிரை வார்க்க கருணையிலே தந்தையென தாயெனவும் இலங்க கற்பு நிறை வாழ்விற்கு காவலராய்த் துலங்க தீமையென்னும் நோய் தீர்க்கும் மருத்துவராய் மிளிர திரி போல எரிந்துருகும் தியாகிகளாய் ஒளிர திருவருளின் சாதனத்தால் இறையுயிரை ஊட்ட திருச் சபையாம் இறையரசை நாடெல்லாம் நாட்ட.
தேவ அழைத்தலுக்காகச் செபம். தமது வேளாண்மைக்கு வேலையாட்களை அனுப்பும்படி வேளாண்மையின் எசமானை மன்றாடுங்கள் என்ற எங்களுக்குப் படிப்பித்தருளிய திவ்விய யேசுவே! தங்கள் திரு ஊழியத்தினால் ஆத்துமாக்களுக்க இரட்சணியத்தையும், உமது பிதாவுக்கு மகிமையையும் கொண்டு வரக்கூடிய அனேக பரிசுத்த குருமார், சந்நியாசர், கன்னியாஸ்திரி மாரை உமது திருச்சபையிலும் சிறப்பாய் எங்கள் பங்கிலும் தேர்ந்தெடுத்தருள அருள் செய்யவேண்டுமென்று தேவரீரை இரந்து மன்றாடுகின்றோம். ஆண்டவரே! இப்போது உமக்கு முன்பாக முழந்தாட்படியிட்டிருக்கும் எங்கள் மத்தியிலிருந்தும் சிலரைத் தேர்ந்தெடுக்க தேவரீர் சித்தங் கொள்வீரானால் நாங்கள் சதா காலமும் எங்கள் முழு இதயத்தோடும் தேவரீருக்கு நன்றி சொல்லுவோம். மருதமடுச் செபமாலை மாதாவே! எங்கள் மத்தியில் பரிசுத்தரான தேவ தொண்டர்கள் அதிகரிக்கச் செய்தருளும். ஆமென். |