Javascript DHTML Image Web Scroller Powered by dhtml-menu-builder.com

Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com

 

லூர்து திருத்தல சிறப்புக் கட்டுரை

லூர்து திருத்தலத்தில் அன்னை மரியா காட்சி கொடுத்த 150 ஆவது ஆண்டு யூபிலி விழா ஒரு கண்ணோட்டம்

அகில உலகிலேயே 'லூர்து நகர்' மிகவும் பிரசித்தி பெற்ற யாத்திரை ஸ்தலம் ஆகும். இது ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்ஸ் தேசத்தில் ஸ்பெயின்-பிரான்ஸ் எல்லைக்கு அருகில் உள்ள நகரமாகும். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து தெற்குப் பக்கமாக 850 கிலோமீற்றர் தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. லூர்து நகரம் மலைகளால் சூழப்பட்ட குளிரான பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் அழகிய நகரமாகும். மலையின் மறுபக்கம் ஸ்பெயின் நாடு. லே-கேவ் (LE-GAVE) என்ற ஆறு லூர்து பேராலயத்தின் இந்த திருத்தலத்தை ரார்பஸ்-லூட்ஸ் (Tarbes-Lourdes) மறைமாவட்ட ஆயர் பரிபாலித்து வருகின்றார். இத்திருத்தலம் இயற்கை சூழலும் அமைதியும் கொண்ட இடமாகும். நிம்மதியாக செபிக்க, தங்க அனைத்து வசதிகளும் கொண்ட அழகிய புனித யாத்திரைத் தலமாகும்.

http://jesutamil.ch/pic_2008/VirgendeLourdes.jpg150 ஆவது ஆண்டு யூபிலி விழா
இத்திருத்தலம் இவ்வருடம் அகில உலக ரீதியில் மிகவும் முக்கியமாகப் பேசப்பட்டு வருகின்றது. காரணம் மரியன்னை காட்சிகொடுத்த 150 ஆவது ஆண்டு நிறைவு யூபிலி விழா இவ்வாண்டு ஆகும். புனித மரியன்னை பேர்ணடேட் எனற சிறுமிக்கு முதன்முதல் காட்சிகொடுத்தது 1858ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி வியாழக்கிழமை ஆகும். அதன் பின்னரும் 18 முறை அன்னை காட்சி கொடுத்துள்ளார். இம்முதல் காட்சி கொடுத்த 150 ஆவது வருட நிறைவு யூபிலி விழாவை ஒரு வருட காலத்திற்குக் கொண்டாடுவதென பிரான்ஸ் ஆயர் மன்றம் தீர்மானித்துச் செயற்பட்டு வருகின்றது.
08.12.2007 தொடக்கம் 08.12.2008 வரை சிறப்பான முறையில் மரியன்னையின் புகழை, அவர் வாழ்ந்த வாழ்க்கை நெறிகளை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், 'மரியாளின் வழியில் கிறிஸ்துவிடம்' அனைவரும் செல்ல வேண்டும் என்றும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பெருவிழாவை அகில உலகில் வாழும் அனைத்து மக்களும் இன ரீதியாக, வேவ்வேறு பக்திச்சபைகள் ரீதியாகக் கொண்டாட ஒரு வருட காலத்திற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதன் உச்சக்கட்டமாக 2008 ஆவணி 15 அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்குரிய சிறப்பான தினங்கள்
உலகில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் தம் கலை கலாச்சாரத்திற்கமைவான நிகழ்ச்சிகள், ஆடம்பரத் திருப்பலிகள், பஜனைகள், மாதா வேண்டுதல், பவனிகள் போன்றவற்றைச் செய்வதற்கு 2008 ஆவணி 9ம், 10ம் திகதிகள் (சனி, ஞாயிறு) ஒதுக்கப்பட்டுள்ளன. அன்றைய தினங்களில் அனைத்து நிகழ்வுகளும் தமிழ்மொழியிலேயே நடைபெறும். இதற்கமைய உலகில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களையும் லூர்து நகர் நோக்கி ஒருங்கிணைக்க லூர்துபதி நிர்வாக ஆயர் இலங்கை  ஆயர் மன்றத்திடம் கேட்டு ஓர் அருட்பணியாளரை இங்கு வரவழைத்துள்ளார். அமதிகளின் வடமாகாண முதல்வரின் அனுமதியோடு அருட்பணி அன்புராசா (அமதி) அடிகளார் தெரிவுசெய்யப்பட்டு லூர்து நகருக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர் தற்போது லூர்துபதியில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டார். இந்த ஒழுங்கமைப்பு லூர்து நகருடன் தமிழ் மொழியில் தொடர்புகளை மேற்கொள்ள பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றது. இப்பெருவிழாவிற்கு ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, இந்தியா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து அதிகப்படியான தமிழ் மக்கள் சமூகம் கொடுத்துச் சிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லூர்து திருத்தலமும் புதுமைகளும்
லூர்து அன்னையின் அருளால் அவரின் வேண்டுதலினால் உலகில் இலட்சக்கணக்கான மக்களுக்கு புதுமைகளும், அருள் வரப்பிரசாதங்களும் கிடைத்திருந்தபோதிலும் அவற்றில் ஒருசிலவே வெளியரங்கமாகப் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சிலரது தகவல்கள்தான் பதிவேடுகள் மூலம் ஆதாரபூர்வமாக 7000ற்கும் (ஏழாயிரம்) மேற்பட்ட புதுமைகள் பதிவுசெய்யப்பட்டுள்ள. இதில் வைத்தியர்களினால் கைவிடப்பட்டு சுகமடைந்த நோய்களும் அடங்கும். லூர்து புனித நீரூற்றில் கழுவித் தோய்ந்து சுகமடைந்தவர்களும் இருக்கின்றார்கள். இவைகள் பதிவேடுகளில் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும் தேசிய வைத்திய ஆணைக்குழு பரிசீலித்து, மிக நுட்பமாக ஆராய்ந்து அவற்றில் 67 மட்டும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்றும் அது அன்னையின் விசேட அருளால்தான் நடந்தது என்றும் அறிவித்து உறுதிப்படுத்தி உள்ளார்கள். இந்த 67 பேரின் சுயவிபரங்கள் முழு விபரத்தோடு லூர்து பேராலயக் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ன. இந்த 67 பேர்களில், 1) 80வீதமானவர்கள் பெண்கள் 2) ஆகக்குறைந்த வயதுள்ளவர்கள் 2வருடம். ஆகக்கூடிய வயதுள்ளவர்கள் 64 வருடம் 3) இவர்களில் 55 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்ள். பெரும்பாலானவர்கள் சாதாரண நடுத்தர தொழில்புரியும் பொதுநிலையினர். கமக்காரர்கள், இராணுவத்தினர், அருட்பணியாளர், அருட்செல்விகள், அருட்சகோதரர்கள், துறவிகள் போன்றோரும் அடங்குவர். அவர்களில் 6பேர் லூர்து நகருக்கு சமூகம் கொடுக்கவேயில்லை. மாதாவின் அருள்வேண்டி அவர் மூலம் நற்சுகமடைந்துள்ளார்கள். 49 பேர் லூர்து நகரின் புனித நீர் ஊற்றின் பலனால் நற்சுகமடைந்துள்ளார்கள். இத்தண்ணீரில் தோய்ந்து நற்சுகமடைந்தவர்கள் 8பேர். இவர்கள் அனைவருடைய பிரதிமைப் படங்களும் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பேர்ணடேற்றின் வாழ்க்கை வரலாறு
பேர்ணடேற் மிகவும் ஏழ்மையான, இறை பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். பலவிதமான சோதனைகளைத தாண்டி வாழ்ந்த இப்பெண் மூலமாகவே 'நானே அமல உற்பவம்' என்று அன்னை மரியா அகில உலகிற்கும் தன்னை வெளிப்படுத்தினார்.
பேர்ணடேற் 07.01.1844ஆம் நாட்டின் மொயின் டி பொலி (mouin de Bolly) என்ற இடத்தில் பிறந்தார். லூர்து நகரில் உள்ள ஆலயத்தில் 09.01.1844ல் திருமுழுக்குப் பெற்று 'மரிய பேர்ணடே' (MARIE BERNARDE) எனும் பெயர் சூட்டப்பட்டார். பேர்ணடேற் 10 மாதமாக குழந்தையாக இருக்கும்போது இவரின் தாய் ஒரு தீவிபத்தில் சிக்குண்டு உணவு உட்கொள்ள முடியாத நிலையில் கடும் வருத்தமாய் இருந்தார். எனவே இவர்கள் பரியஸ் (BARIES) என்ற இடத்தில இருக்கும் தாயின் நண்பியான ஒருவரின் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார்கள். அங்கு அவர்கள் வசித்து வந்தபோது பேர்ணடேற்றின் ஒரு தம்பி அங்கு காலம் சென்றுவிட்டான்.

1846 சித்திரை மாதம் 1ம் திகதி பேர்ணடேற்றிற்கு 26 மாதமாய் இருக்கும்போது மீண்டும் பிறந்த வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்தார்கள். 24.06.1854 ல் இவர்கள் வசித்து வந்த வீட்டைக் கைவிட்டுச் சென்றுவிட்டனர். பின்னர் துயரம் நிறைந்த வாழ்க்கையை மேற்கொண்டனர். 1855ம் ஆண்டு ஆடி மாதம் பேர்ணடேற்றிற்கு 11 வயதாக இருக்கும்போது லூர்து நகரில் கொலரா வியாதி பரவியது. அந்நாட்களில் சரியான மருத்துவ வசதிகள் கிடைக்காததால் மிகவும் கஸ்ரப்பட்டு பின் மருந்துகளின் உதவியினால் சற்றுச் சுகமடைந்தார். பின்னர் இவர் 'ஆஸ்மா' வியாதியினால் பீடிக்கப்பட்டு, அதனால் மிகவும் கஸ்ரப்பட்டார்.

1856 கார்த்திகை மாதம் இவர்கள் கையில் பணமில்லை. இருக்க வீடு இல்லை. வேலையில்லை. இப்படிக் கஸ்ரப்படும்போது தாயின் மருமகன் முறையான ஒருவர் இவர்களை அழைத்துச் சென்று முன்னர் மறியல் வீடாகப் பாவித்த ஒரு வீட்டில் இருக்க ஒழுங்கு செய்தார். பேர்ணடேற்றக்கு 13 வயதாய் இருக்கும்போது 1857 செப்ரெம்பரில் பங்குத் தந்தையிடம் முதல்நன்மை ஆயத்த வகுப்புகளுக்குச் சென்று படித்தார். அந்நேரம் பேர்ணடேற்றுக்கு இருந்த ஞான அறிவை பங்குத்தந்தை பல தடவை பாராட்டியுள்ளார். பேர்ணடேற் தெய்வ பக்தியிலும் ஞான அறிவிலும் வளர்ந்து வந்தார்.
பாற்றர்ஸ் (Barters) என்ற புதிய இடத்தில் இவர்களின் வாழ்க்கை மிகவும் துயரம் நிறைந்ததாய் இருந்தபடியால் மீண்டும் பிறந்த வீட்டிற்கு வந்தனர். பேர்ணடேற்றின் படிப்பு குழப்ப நிலையில் இருந்தது. 1858 ஜனவரி  21ம் திகதி வியாழக்கிழமை முன்னர் தங்கியிருந்த குடிசை வீட்டிற்கு வந்தார். வீடு சேறும் சகதியுமாய் துர்நாற்றம் வீசியபடி இருந்தது. மிகவும் சிரமத்துடன் துப்புரவு செய்து வாழ்ந்து வந்தனர்.

1858 பெப்ரவரி 11ம் திகதி வியாழக்கிழமை (விபூதிப் புதனுக்கு மறுநாள்) பேர்ணடேற் மற்றும் இவரின் சகோதரி அன்ரொய்நெற் (Antoinette), இவரின் நண்பி ஜீனே அபாடை (Jeanne Abadie) ஆகிய மூவரும் விறகுகளைச் சேகரிப்பதற்காக மசாபியல்லே (Massabielle) என்ற மலைப்பாங்கான பகுதிக்குச் சென்றார்கள். அவ்விடத்தி லி கேவ் (LE GAVE)  என்ற ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கடக்கத் தன் பாதணிகளைக் கழற்றும் வேளையில் வானத்தில் பெரிய காற்று இரைச்சல் சத்தம் கேட்டது. அச்சத்தம் கேட்ட திசை மலைப்பகுதி. மலையில் ஒரு குகையில் வெண்துகில், நீல  இடைப்பட்டி, மஞ்சள் றோசா பாதணி கொண்ட ஒரு பெண்ணை பேர்ணடேற் கண்டாள். இதுவே முதல் காட்சி தொடர்ந்து பேர்ணடேற் அவ்விடத்திற்கு வந்து செபமாலை சொல்லி வந்தார். 1860 யூலை மாதம் 15ம் தேதி பேர்ணடேற் ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டார். மிகவும் கஸ்ரப்பட்ட நிலையில் லூர்து நகர் பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மாதா காட்சி கொடுத்த நேரம் கேட்டுக்கொண்ட 'இவ்விடத்தில் ஓர் ஆலயம் கட்டு' என்ற விடயமாக பங்குத்தந்தையுடன் பல முறை கலந்துரையாடியிருக்கின்றார். பங்குத் தந்தையும் இறையருளால் ஏவப்பட்டு ரார்பஸ்-லூர்ட்ஸ் (TARBES – LOURDES)  ஆயர் லோறன் (LAURENCE) உடன் பேசியிருக்கின்றார். இந்த ஆயர்தான் 03.06.1858ல் பேர்ணடேற்றிற்கு முதல் நன்மை வழங்கியவர். ஆயரும் 19.05.1866ல் அவ்விடத்தில் ஓர் ஆலயம் கட்ட அனுமதி வழங்கினார். இந்த ஆரம்ப விழாவிற்கு பேர்ணடேற் வைத்தியசாலையில் இருந்து அனுமதி பெற்று வந்து சிறப்பித்துள்ளார். பின்னர் இறைவன் சித்தப்படி 1866 யூலை மாதம் 3ம் தேதி நேவர்ஸ் (NEVERS) என்ற இடத்தில் உள்ள ஒரு கன்னியர் சபையில் (CONGREGATION DES SOEURS)  இணைய பேர்ணடேற் சம்மதித்தார். கன்னியர் மடத்திற்குப் புறப்படு முன்னர் தான் வாழ்ந்த வீட்டையும், மாதா காட்சி கொடுத்த இடத்தையும் சென்று தரிசித்துவிட்டுப் புறப்பட்டார். 1866 யூலை 7ம் தேதி புனித கிஸ்டாட் (ST.GILDARD) கன்னியர் மடத்தில் அனுமதிக்கப்பட்டார். 1867 ஐப்பசி  30ம் தேதி பேர்ணடேற் வாக்குத்தத்தம் கொடுத்த தினமாகும். இவருடன் மற்றும் 43 கன்னியர்கள் இணைந்து கொண்டனர். ஒவ்வொரு கன்னியர்கள் பற்றி தகமைகள், அறிவு, சுகம் பற்றி நுட்பமாக ஆராயப்பட்டு வெவ்வேறு பணிகளுக்கு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். பேர்ணடேற் சுகவீனமுற்றவரானபடியால் அம்மடத்தில் நோயாளரைப் பராமரிக்கவும் சமயலறையில் பணிபுரியவும் பணிக்கப்பட்டார். தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை இறைபணியென ஏற்றுச் செய்துவந்தார். இடையிடையே ஆஸ்மா நோயால் கடுமையாகத் தாக்கப்பட்டார். 1879 ஏப்பரல் 14ம் தேதி நடமாட முடியாத கட்டத்தில் படுக்கையில் வீழ்ந்தார். 1879 ஏப்ரல் 16ம் தேதி மாலை 3.00 மணிக்கு பேர்ணடேற் இறைபதம் சேர்ந்தார். இறக்கும்போது இவருக்கு வயது 35 வருடம், 3 மாதம், 9 நாட்களாகும்.

லூர்து திருத்தலம் தொடர்பான சில சுவையான செய்திகள்
• தற்போது லூர்து நகரின் மையம் கெபி (GROTTO). இது அமைந்துள்ள பகுதியை மசாபியல்லே(Massabielle) என்பார்கள். MASSABIELLE என்பதன் பொருள் பழைய பாறை  (OLD-ROCK)  ஆகும் . இது சனசந்தடி அற்ற பகுதியாகும்
• உலகில் அதிகப்படியான யாத்திரிகர்களும் பார்வையாளரும் தரிசிக்கும் இடம் இந்தக் 'கெபி' ஆகும். ஒரு வருடத்திற்கு 6 மில்லியன் மக்கள் இங்கு வந்துபோகிகின்றார்.
• இக்கெபிக்கு முன்னால் உள்ள ஆற்றின் பெயர் லீ கேவ் (LE-GAVE) ஆகும். இந்த ஆறு 1858லும் 1900 லும் இரண்டு முறை மண்ணால் நிரப்பப்பட்டது. 350 மீற்றர் நீளமும் 28 மீற்றர் அகலமும் கொண்ட நிலப்பரப்பு மண்ணால் நிரப்பப்பட்டு கெபிக்கு முன் மக்கள் ஒன்றுசேர இடம் ஏற்பாடு சேய்யப்பட்டது.
• லூர்து நகரில் மட்டும் மக்கள் தொகை 15,000 (2003 ஆம் ஆண்டுக் கணக்குப்படி) 170 நாடுகளில் இருந்து 6மில்லியன் மக்கள் யாத்திரிகர்களாகவும் பார்வையாளராகவும் இங்கு வந்து செல்கிறார்கள்.
• இத்திருத்தலத்தில் உத்தியோகபூர்வமாக 6 மொழிகள் வழக்கத்தில் உள்ளன. பிரானஸ், ஜேர்மன், ஸ்பானியம், இத்தாலி, ஆங்கிலம் மற்றும் போர்த்துக்கல் ஆகிய இம்மொழிகளாகும்.
• பேர்ணடேற்றுக்குக் காட்சி கொடுத்த அப்பெண்ணின் உருவம் உடையமைப்புக்கமைய இப்போது அந்தக் கெபியில் இருக்கும் அன்னை மரியாளின் திருச்சுரூபம் ஜோசவ் வாபிஸ் (JOSEPH FABISG)  என்ற சிற்பக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு 1864ல் வைக்கப்பட்டது.
• கெபிக்கு முன்னால் சிறுபிள்ளைகளை ஆசீர்வதிப்பதற்கென்று மாலை 4.00 மணிக்கு ஒரு அருட்பணியாளர் காவல் இருப்பார். ஏப்ரல், ஒக்ரோபர் முடியும் மட்டும் மாரிகாலத்தில் நேரத்தில் மாற்றம் செய்துள்ளனர்.
• இத்திருத்தலத்தில் நோயாளர்களையும், வலது குறைந்தோரையும் தங்கவைத்துப் பராமரிக்க விசேட வைத்தியசாலைகளும் தங்குமிட வசதிகளும் உண்டு.
• நூற்றுக்கணக்கான சமூகநலப் பணியாளர்கள் இலவசமாக இவர்களைப் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
• ஒவ்வொரு வருடமும் 100,000 பேர் ஆண், பெண், வயது வித்தியாசமின்றி மகிழ்வுடன் வந்து பணிபுரிகின்றனர்.
• இக்கெபிக்கருகில் தேவையான அளவு மெழுகுவர்த்திகள்  தொகையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்குரிய பணத்தை உண்டியலில் போட்டு எடுக்கமுடியும. ஒருவரும் கண்காணிப்பது இல்லை. ஒவ்வொரு வருடமும் மார்ச்-ஒக்ரோபர் முடியும் மட்டும் 700 தொன் மெழுகுவர்த்திகள் எரிக்கப்படுகின்றன.
• வருடம் முழுவதும் கெபிக்கு முன் மக்களின் வேண்டுதல்களை பிரதிநிதிப்படுத்துவதற்காக மெழுகுவர்த்திகள் எரிந்தவண்ணமே இருக்கும்
• இக்கெபியில் மாதா காட்சி கொடுத்த முழு விபரமும், விசாரணைகள், அரச, நிர்வாக அதிகாரிகளின் கடிதங்கள் யாவும் ஆறு பெரிய புத்தகக் கோவையாகக் (6-Volumes) கட்டப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
• எம் தாய் நாட்டில் மடு, சாட்டி, தலவில் போன்ற இடங்களுக்கு மக்கள் பாதயாத்திரையாகச் செல்வதுபோல் இங்கும் மக்கள் பாதயாத்திரை செய்துள்ளதாக அறியப்படுகின்றது.
• ஓவ்வொரு வருடமும் ஏப்ரல் தொடக்கம் ஒக்ரோபர் வரை மாலை 5.00 மணிக்கு நோயாளரை ஆசீர்வதிக்கும் முகமாக நற்கருணைப் பவனியும், மாலை 9.00 மணிக்கு மரியன்னை மெழுகுவர்த்திப் பவனியும் நடைபெற்று வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இதில் கலந்துகொள்கின்றனர்.
• இம்மாதங்கில் லூர்து திருத்தலத்தில் நடைபெறும், நடைபெற்ற புதுமைகள் பற்றிய விபரங்கள் விளக்கங்களை அளிப்பதற்கு லூர்துநகர் வைத்திய அதிகாரசபையின் பிரபல டாக்டர் ஒருவர் மாலை 3.30 மணிக்கு தகவல் நிலையத்தில் இருப்பார்.
• உலகில் மிக அழகுவாய்ந்த பேராலயங்களில் ஒன்று இங்கு திருத்தலத்தின் மையமாக இருக்கின்றது. THE BASILICA OF OUR LADY OF THEROSARY
• தங்குமிட வசதிகள் அற்றவர்கள், விடுதிகளில் தங்க வசதி குறைந்தவர்கள் போன்ற நடுத்தர மக்களுக்கு உதவிகள் புரிய ஒரு சிறிய கிராமத்தை உருவாக்கியுள்ளனர். இங்கு இலவச உணவு தங்குமிடம் போன்றவை தரப்படும். மனிதாபிமான அடிப்படையில் நம்மால் ஏலுமான உதவிகள் புரிய வேண்டும்.
• இச்சிறிய கிராமத்திற்குத் திருத்தலத்தில் இருந்து 15 நிமிடத்தில் நடந்து செல்லலாம்;. ஆலய நிர்வாகம் பஸ் சேவை நடத்துகின்றது. இங்கு தங்குவதற்கு நேரகாலத்துடன் அனுமதிபெற்று இடங்கள் பதிவுசெய்யப்படவேண்டும்.
• SECORUS CATHOLIQUE  அல்லது   CARITAS  மூலமாகப் பதிவுகளைச் செய்ய முடியும். தொலைபேசி 0033 0562427111 பக்ஸ் 0033 62427119

E-mail: cite.sainnt.pierre@wanadoo.fr• 

• பேர்ணடேற் பிறந்து வாழ்ந்த வீடு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகின்றது. யாத்திரையாக வருபவர்கள் இதைச் சென்று பார்க்க முடியும். வீடு இருக்கும் வீதிக்கு அவரின் பெயர் வைத்துள்ளனர்.
• பேர்ணடேற்றுக்கு மரியன்னை காட்சி கொடுத்த நாட்களில் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்தவர் அருட்பணி. பெய்ராமேல்(PEYRAMALE). அவர் தங்கியிருந்த குருமனையை இப்போது மாநகரசபை வாசிகசாலையாக மாற்றியுள்ளார்கள்.
• இப்பங்குத்தந்தை ஆரம்பத்தில் பேர்ணடேற்றை நம்பாவிட்டாலும் பின்னர் பேர்ணடேற்றின் பக்தி, விசுவாசம், மற்றும் பேர்ணடேற்றிற்கு இருந்த மக்கள் ஆதரவு போன்றவற்றால் கவரப்பட்டு பேர்ணடேற்றிற்கு ஆதரவாகச் செயற்பட்டார்.
• 1844 தொடக்கம் 1870 வரை ரார்பஸ்-லூட்ஸ்(TARBES-LOURDES)ஆயராகப் பணிபுரிந்தவர் ஆயர் லோறன்ஸ் (LOURENCE)இவர் காட்சி விபரங்கள் யாவற்றையும் நுணுக்கமாக ஆராய்ந்து பரிசீலனை செய்து அதில் உள்ள ஆதாரங்களையும் மேலிடத்திற்கு அறிவித்தார். பின்னர் 1862இல் இக்காட்சிகள் உண்மை  என்று அங்கீகாரம் வழங்கினார்.
• பேர்ணடேற் 16.04.1876 கடும் வருத்தத்தினால் மரணமடைந்து அக்கன்னியர் மடத்தின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
• ஓவ்வொரு வருடமும் பெப்ரவரி 18ம் திகதி இவரின் பெயர் கொண்ட திருநாள் ஆகும்.
• அன்றைய தினம் பேர்ணடேற்றின் புனித பண்டங்கள் லூர்து நகரில் ஊர்வலமாக எடுத்துச்சென்று மரியன்னை காட்சி கொடுத்த கெபி வரை கொண்டு செல்வார்கள்.

 

2008-05-31**********  Page 91

************************************************************************************

All Article News --- All Head News